Thursday, December 19, 2013

நான் எப்படி எழுதவேண்டும்?

நான் எழுதுவது எப்படி இருக்க வேண்டுமேனில், அது முழுவதும் வித்யாசமான ஒரு புதிரான நடையாகவும், படித்தவற்றிலேயே மிகவும் பொருள் மயக்கம் தரும் புரியாத நடையாகவும், வாக்கியங்கள் எல்லாம் எழுவாய் ஒரு இடத்தில் இருந்தால் பயனிலையும் தொலைதூர இடைவெளியில் இருக்க அவை ஒரு கலைக் களஞ்சியம் போலவும், எதிர்பாராத இடங்களில் வாக்கியங்களுக்குள் வாக்கியங்கள் நுழைக்கப்பட்டு, வாசகர் விளங்கிக் கொள்ள முடியாத நிலையில் முற்றுப்புள்ளி வருவதற்கு முன்னரே முதல் பகுதி மறைந்து போய்விடவேண்டும். இவற்றையெல்லாம் விட, சிறப்புப் பொருள்களைத் தாங்கி நிற்கும், அறிவிற்கு எளிதில் பிடிபடாத கருத்துக்கள் பெருகி இருக்கவேண்டும். அதன் பொருட்கள் கூறப்பட்டிருக்கக் கூடாது. அதன் உட்பொருளை நாம் ஊகித்துத்தான் உணர வேண்டும். இப்படிக் குழப்பமான கருத்துக்கள் ஒன்றுக்கு மேல் ஒன்று வேகமாகவும், நெருக்கமாகவும் அடுக்கப்படவேண்டும்.

என்னுடைய எண்ணங்கள் வெகுவாகப் பாதுகாக்கப் பட்டிருக்கின்றன. பெரிய சுரங்கப் பாதைகளுள்ள கோட்டைகள் நீண்டு கொண்டே போவது போல, என் எண்ணங்களும் குழப்பம் தரும் வாதங்களால் சூழப்படிருக்கின்றன. கடைசியில் எந்தக் கருத்தை நான் இப்படிக் காவல் காத்துக் கொண்டிருக்கின்றேன் என்று கண்டுபிடிப்பதே முடியாமல் போய்விடவேண்டும். ஓர் அறையில் பெரிய விவாதம் நடந்து, அப்போதுதான் முடிந்திருக்கின்றது. நீங்கள் உள்ளே போகிறிர்கள், எல்லோரும் அமைதியாக இருக்கிறார்கள், யாரும் பேசவில்லை. ஒன்றும் புரியாதல்லவா? அதுபோன்ற புரியாத தன்மைதான் என் எண்ணங்களும்.

No comments:

Post a Comment